Sunday, May 06, 2007

வேற்றுமையில் ஒற்றுமை

இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக பள்ளியிலேப் படித்தது.

எத்தனை மொழிகள்? எத்தனை மதங்கள்? மறக்க முடியாதபடி எத்தனை சாதிகள்?

அதே நேரத்தில் எத்தனை சண்டைகள்?


யோசித்துப் பார்த்தால் அமெரிக்காவில் நம்மை விட அதிகமாக வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணுகிறார்கள் எனத் தோன்றுகிறது. சுதந்திரத்துக்கு முன்பே தலித்துகள் போராட ஆரம்பித்தும் நம்மால் இன்னும் இரட்டை டம்ளரை டீக்கடையில் ஒழிக்க முடியாத பொழுது, 1960-களில் தீவிரமடைந்த போராட்டத்தின் மூலம் கறுப்பின மக்களுக்கு எதிரான கொடுமைகளை மிக வேகமாக குறைக்க முடிந்த்தது ஒரு சாதனை.


கறுப்பின மக்களின் பொருளாதர நிலையில் இன்னும் நிறைய முன்னேற்றம் வேண்டும் என்பது உண்மைதான். சில இடங்களில் அவர்களுடைய நிலை
மோசம்தான். ஆனால், அவர்களை யாராலும் பொது இடத்தில் வெளிப்ப்டையாக அவமானப்படுத்த முடியாது. That is politically incorrect. எல்லா பொது கட்டிடங்களிலும் இந்த கட்டிடத்தில் அனைவரும் நுழைய அனுமதி உண்டு. நிறம் மற்றும் இனத்தின் அடிப்படையில் யாரையும் பாகுபடுத்த கூடாது என்ற அறிவிப்பு காணப்படும்.


அடிமை முறையை ஒழிக்க முற்பட்ட பொழுது, தனி நாடு கேட்டு தென் பகுதி மக்களால் மக்களால் போராட்டங்கள் தொடங்கப் பட்டன. அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய தலைவர்களைப் பெற்ற பெருமை உடைய நாடு அது. இரட்டை டம்ள்ரை எதிர்த்தால், அந்த கிராமத்தின் 500 ஒட்டு போய் விடும். எதிர்க்காவிட்டால் 100 ஓட்டுதான் போகும் என்று கணக்கு போடும் தலைவர்களைப் பெற்றப் பெருமை உடைய நாடு நமது.


வெள்ளையின மக்களும் கறுப்பின மக்களும் மட்டில்லை. இந்தியர்கள், சீனர்கள், மெக்சிகோ, பாகிஸ்தானியர், அரபு நாட்டினர் அனைவரையும் உள்ளடக்கிய நாடு


அது. அங்கே இல்லாத இனம் ஒன்று சொல்லுங்கள் என்றால் நீண்ட நேரம் யோசிக்க வேண்டும். நம் நாட்டை விட நிறைய கலாச்சாரங்கள் நிறைந்த நாடு அது. முற்றிலும் வேறு பட்ட கலாச்சாரத்தை உடைய மக்கள் நிறைந்த நகரங்களை உடைய நாடு அது.


கடைசியாக அங்கே நடந்த பெரிய இனப் பிரச்சினை எது என்று யோசித்தால், 15 வருடங்களுக்கு முன்பு நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்தான் ஞாபகம்
வருகிறது. நம் நாட்டில் தினம் ஒருவரையாவது சாதிப்பிரச்சினையால் வெட்டாத நாள் உண்டா? கோத்ரா போன்ற கலவரங்கள் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையேனும் நடக்கிறது.


எனக்கு என்னமோ வேற்றுமையில் ஒற்றுமைக்கு அமெரிக்காதான் நல்ல உதாரணம் எனத் தோன்றுகிறது. வேற்றுமைகள் நிறைந்த நாடு என்ற பெருமையை வேண்டுமானால் நாம் வைத்துக் கொள்ளலாம்.

Sunday, April 22, 2007

சாதிகள் இல்லையடி பாப்பா - வலையிலே சாதி, மத, மொழி சண்டைகள்

எனக்கு எப்போது சாதி என்ற ஒரு விஷயம் அறிமுகமானது? நான் 3-ஆம் வகுப்பு படிக்கும் பொழுது, பள்ளியில் எல்லாருடைய சாதியையும் கேட்டு பதிந்து கொண்டு இருந்தார்கள். என்னை எழுப்பி கேட்ட பொழுது
எனக்கு தெரியவில்லை. இந்து என்றேன். மதம் பற்றிய அறிவு எப்போது மூளையில் பதிந்தது அல்லது பதிக்கப்பட்டது என்பது என் ஞாபகத்தில் இல்லை. ஆக 3-ஆம் வகுப்பில் இருந்து சாதி என்கின்ற விஷயத்தை
பற்றிய விவரங்கள் என் மூளையில் கொஞ்சம் கொஞ்சமாக பதிக்கப்பட தொடங்கியது.

என்னுடைய வளர்ப்பை பற்றி சிந்தித்து பார்த்தால் நான் பிறந்த்தது முற்போக்கான குடும்பத்திலோ அல்லது பகுத்தறிவு குடும்பத்திலோ கிடையாது. என் தாத்தா தலை முறையில் இருந்தவர்களுக்கு சாதி பிடிப்பு
இருந்தது. அதற்கு அடுத்த தலை முறையில் கொஞ்சம் குறைந்தது, ஆனாலும் இருந்தது. அவர்கள் எப்போதும் அந்த பிடிப்பை வெளிப்படையாக பறை சாற்றி கொண்டது கிடையாது. சில குறிப்பிட்ட சாதிகளின்
மீதுள்ள வெறுப்பை சில பொழுதுகளில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இருக்கும் வேளையில் வெளிப்படுத்துவது உண்டு. ஆனால் எங்கள் தலைமுறையின் மீது அந்த பற்று திணிக்கப்ப்டவில்லை.

அதனால் நான் சாதியின் மீது எந்த பிடிப்பும் இல்லாமல்தான் வளர்ந்தேன். இன்றும் இருக்கிறேன்.

பள்ளியில் படித்த பொழுது யாரும் என்னை சாதியின் பெயரால் விலக்கியதும் இல்லை. நானும் யாரையும் விலக்கியது இல்லை. இத்தனைக்கும் நான் 2 வருடங்கள் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரால் நடத்தப் பட்ட
பள்ளியில் படித்தேன். அதனால் எந்த பாதிப்பும் என்னுள் இல்லை.

எப்போதுமே என்னுள் இருந்து வந்த நம்பிக்கை என்னவெனில், படிப்பும் வசதியும் வந்து விட்டால், சாதி, மதம், மொழி, இனம் இது போன்ற குறுகிய வட்டத்தில் சிந்திப்பது குறைந்து விடும் என்பதுதான்.

ஆனால் அது தவறு என்பது போல் அடுத்தடுத்த அனுபவங்கள் அமைந்த்தன.
இளங்கலை படித்த கல்லூரியிலும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் அதிகம் இருந்தனர். ஒரு சாதி பெருமையும் அடுத்தவன் தாழ்ந்தவன் என்கிற எண்ணமும் மிக மிக மெல்லிய இழையாக நிறைய பேர் மனதில்
அடியோடுவதை உணர முடிந்த்தது. ஆனால் யாரும் அதை பறை சாற்றி கொள்ளவில்லை. அது வரலாற்று காரணங்களல் இருக்கலாம் அல்லது இத்தனை படித்த நாம் சாதிப் பற்றை வெளிப்படையாக காண்பிப்பதா
என்ற வெட்கமாக இருக்கலாம்.

எனவே கல்லூரி முடிக்கும் வரை எனக்கு சாதி குறித்த எந்த அதிர்ச்சியான அனுபவமும் இல்லை.

முதுகலை படிக்க சென்ற இடத்தில்தான், சாதிப் பற்றை வெளிப்படையாக பறை சாற்றி கொள்பவர்களை பார்த்தேன். கிராமத்து சூழ்நிலையில் இருந்து படிக்க வந்தவர்கள் அதிகம் இருந்தது காரணமாக இருக்கலாம்.
நம்ம சாதிப் பொண்ணை அவன் எப்படி மடக்கப் பார்க்கலாம் போன்ற வார்த்தை பிரயோகங்கள் சாதாரணமாக எந்தவொரு வெட்கமும் குற்ற உணர்வும் இன்றி உபயோகிக்கப் பட்டன. கல்லூரி விடுதியில் இரு
சாதி குழுக்கள் சண்டையிட்டு கொண்டது எனக்கு ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சியின் உச்சம். இந்த சூழ்நிலை கொடுத்த சுதந்திரத்தின் காரணமாக நகர் புறத்திலே இருந்து நன்கு படித்த குடும்பத்தில் இருந்து வந்த
மக்களும் சாதிப் பெருமையை வெளிப் படையாகப் பேச முடிந்தது. அது சாதியின் மேன்மையைப் பற்றிய பிரசங்கமாக இருக்காது. அனேகமாக நாங்கள்லாம் ................. ளாக்கும். எங்களோட திறமை இது என்பது
போன்ற வார்த்தைகளோடு முடிந்த்து விடும். ஆனால் இது போன்ற நிகழ்வுகள் என்னுள் படிப்பு சாதியை ஒழிக்கும் என்ற எண்ணத்தை பொய்யாக்கியது.

படித்து முடித்து சென்னைக்கு வந்த இடத்தில் பெரிய ஊரில் இது போன்ற விஷயங்களுக்கு யாருக்கும் நேரம் இருக்காது என நினைத்தேன். என்னுடைய நிறுவனத்திலும், வெளிப்படையாக எதுவும் இல்லை எனினும்
கண்ணுக்கு தெரியாத ஒரு சூட்சும இழை ஒடுவதை உணர முடிந்த்தது. ஆனால் வேறு சில நண்பர்களின் அனுபவம் வேறு மாதிரியாக இருந்தது. வெளிப்படையான பெருமிதங்களிலும் வார்த்தை பிரயோகங்களிலும்
அதிர்ச்சி அடைந்த்தவர்கள் அதிகம்.

இதை விடப் பெரிய அதிர்ச்சி கொஞ்ச நாட்களுக்கு முன் சில வலைப் பூக்களை படிக்க நேர்கையில் கிடைத்தது. சாதி துவேஷங்களின் உச்ச கட்ட வெளிப்பாடும் சாதி சண்டையும் கிராமங்களில் இருந்து வலைக்கு
இடம் பெயர்ந்து விட்டதா என்ன. முகம் காட்டாமல் காயம் இல்லாமல் எதிராளியை தாக்க வசதி கிடைத்தவுடன் வெளிப்படையாக பேச வெட்க பட்ட மனத்தின் அழுக்கு வெளியில் வருகிறது.

சாதி வெறி என்றில்லை. மத வெறி, இன வெறி, மொழி வெறி எல்லாம் தலை விரித்து ஆடுகின்றன. சில வலைப் பதிவுகளில் சென்று பார்த்தால், வலைப் பதிவுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத சாதி சண்டைகளும், இன
துவேஷமும் நிறைந்த பின்னூட்டங்கள் காணக் கிடைக்கின்றன. தமிழ் வலை பதிவுகளில் சாதி சண்டை, மத சண்டை என்றால், ஆங்கில வலை பதிவுகளில், மொழி சண்டையும் மத சண்டையும்.

என் அனுபவத்தில் நிறைய மக்களிடையே சாதி பெருமை, மத பெருமை இன்ன பிற பெருமைகள் இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்ட தயக்கம் இருந்தது. அந்த தயக்கமே அடுத்த தலைமுறையிடையே இது
போன்ற உணர்வுகள் குறைய காரணம். ஆனால், இன்று வலையிலே இது போன்ற பெருமைகளை வெளி காட்டுவதன் மூலம், இது போன்ற உணர்வுகளை, வேரோடு அறுத்தெறிவதற்கு தேவையான தலைமுறைகளின்
எண்ணிக்கை அதிகமாகி விட்டது என்பது என் கருத்து.

பாட்டாளி மக்கள் கட்சி

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ஐயா அவர்கள் மரம் வெட்டி ராமதாஸ் ஆக இருந்து இன்று மருத்துவர் ஐயா ஆக வளர்ச்சி பெற்று இருக்கிறார்.


புரட்சிதலைவி ஜெயலலிதா அவ்வப்போது மட்டும் பொதுமக்கள் மத்தியில் தலை காட்டுகிறார். விஜயகாந்துக்கு, குடிகாரன் என்ற பட்டத்தை எதிர்த்து அறிக்கை விடவே நேரம் சரியாக இருக்கிறது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ஐயா அவர்கள் கிரிக்கெட் ஆரம்பித்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வரை அனைத்தையும் எதிர்த்து நாளொரு அறிக்கையும் பொழுதொரு போராட்டமும் நடத்தி வருகிறார்.


சிறப்பு பொருளாதர மண்டலமோ, ரிலையன்ஸ் ரீடெயிலோ, விமான நிலைய விரிவாக்கமோ - அவை சரியா, தவறா என்பது வேறு விஷயம் - மருத்துவர்
ஐயாவின் அறிக்கையும் போராட்டமும் இல்லாமல் அவை நடப்பது இல்லை (நிற்பது இல்லை - விமான நிலைய விரிவாக்கம் நடக்கவே நடக்காது என்று
நினைக்கிறேன்).


என்னை பொறுத்த வரை இதன் அர்த்தம்:

மருத்துவர் ஐயா போராட்ட அரசியலை கையில் எடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்டோரின் பாதுகாவலனாகத் தன்னை காட்டிக் கொள்வதன் மூலம், தன்னுடைய ஓட்டு வங்கியை விரிவு படுத்தும் முயற்சி. இது ஒரு திட்டமிட்ட அரசியல் முடிவாக இருக்கலாம். மரம் வெட்டி, சில மனிதர்களையும் வெட்டி, பாட்டாளி மக்கள் கட்சி தன்னை பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சக்தியாக வெளிப்படுத்தி நிலைநிறுத்தி கொண்டது. ஆனால், கடந்த 10 அல்லது 15 வருடங்களில் ஏதும் பெரிய முன்னேற்றம் கிடையாது.


மருத்துவர் ஐயா இப்போது அடுத்த கட்டத்துக்கு போக ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதன் விளைவுதான் அரசின் இலவச திட்டங்களை தவிர அனைத்து பிற திட்டங்களையும் எதிர்க்கும் முடிவு. விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்தால் ஒரு தொகுதி. துணை நகர திட்டத்தை எதிர்த்தால், ஒரு தொகுதி என்ற கணக்காக இருக்கலாம்.
இந்த பாணி அரசியல் போணி ஆகும் என்றுதான் தோன்றுகிறது.

இதை அப்படியே இன்னும் 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்தாலோ அல்லது அந்த காலத்தில் தி.மு.க - வுக்கு, ஒரு இந்திப் பிரச்சினை மாதிரி ஒரு பற்றி எரியும் பிரச்சினை பா.ம.கு-வுக்கு கிடைத்தால் இன்னும் சீக்கிரமாகவோ, மருத்துவர் ஐயா தன் மகனையோ அல்லது மகளையோ (தமிழ் பேசக் கற்றுக் கொண்டிருக்கும் அல்லது இப்போது கற்றுக் கொண்டு விட்ட) அல்லது பேரனையோ தமிழக முதல்வராக்கி விடலாம் என்றுதான் தோன்றுகிறது.

Wednesday, April 18, 2007

GM Diet

ஒரு பதிவு அரசியல், சினிமா, கிரிக்கெட் பற்றி இருக்கக்கூடாது என்று யோசித்து (ஏனெனில், அடுத்து வரும் பதிவுகள் அவைப் பற்றித்தான் இருக்கும் என்பதால்), தேர்ந்தெடுத்த தலைப்பு இது.


ஓரே வாரத்தில் 5 கிலோ எடை குறைய வேண்டுமா? GM Diet உங்களுக்கு உதவக் கூடும். பின் வரும் URLகளை பார்க்கவும்.


http://www.iimahd.ernet.in/~jajoo/gmdiet.html

http://www.it.iitb.ac.in/~jaju/health/GeneralMotorsDiet.html


நான் அறிந்த மூல (original) GM Diet-ல் beef ஒரு முக்கிய அம்சம் வகிக்கிறது. அதனால், நம் மக்கள், இதை vegeterians-க்காக, கொஞ்சம் மாற்றி இருக்கிறார்கள். அந்த வலைச்சுட்டிகள்(URL) கீழே.


http://www.parablog.com/wp/2006/11/16/gm-diet-details/


Google-ல் GM Diet என்று தேடினால், இன்னும் நிறைய வலைச்சுட்டிகள்(URL) கிடைக்கும்.


நான் இது வரை முயற்சி செய்ததில்லை. உடன் பணி புரிவோர் சிலர் முயற்சி செய்தலில் கிடைத்த முடிவுகள் மாறு பட்டவை. GM Diet-ல் உள்ள அசைவ உணவு வகைகளுக்கு மாற்றான சைவ உணவு வகைகளை எடுப்பதில் உள்ள வித்தியாசம் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து. முயற்சி செய்தவர்கள் 2 கிலோவில் இருந்து 4 கிலோ வரை எடை குறைந்தார்கள்.
ஆனால், diet முடிந்த 2 வாரங்களில், இழந்த எடையை வெற்றிகரமாக திரும்ப பெற்று விட்டார்கள். ஒரு வாரம் சாப்பிடாததை, சேர்த்து வைத்து சாப்பிட்டதால் இருக்கலாம்.


Doctor-கள், இது போன்ற, diet-களை, fad-diet என்பார்கள். மையக் கருத்து என்னவென்றால், எவ்வளவு சீக்கிரம் எடையை இழக்கிறோமோ, அதே வேகத்தில், இழந்த எடையைத் திரும்பப் பெற்று விடுவோம். ஒரு வாரமோ ஒரு மாதமோ செத்துப் போன நாக்கு, கிடைக்கிற வாய்ப்புகள் எதையும் தவற விடாது.


எடை குறைக்க சிறந்த வழியாக Doctor-கள் சொல்வது.

1. அனைத்து உணவுப் பொருட்களையும் அளவுடன் சாப்பிடலாம் (ஆரோக்கியமான உடல் நிலை உள்ளவர்கள் - PP, Sugar - இன்ன பிற இல்லாதவர்கள்)

2. இரவு உணவு மிதமாக இருத்தல் நலம். 8 மணிக்கு பிறகு சாப்பிடாமல் இருத்தல் நலம். பச்சை காய் கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் சாப்பிடுதல் மிக மிக நலம்.

3. தினம் ஒரு மணி நேர நடைப் பயிற்சி.

4. ஒரு நாளில் 3 முறை நிறைய சாப்பிடுவதை விட 5 முறையாகப் பிரித்து ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது நல்ல பழக்கம்.


Disclaimer: This is only a compilation of information available on the net. No responsibility accepted for undesired effects.